×

ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: விரைவில் தொடக்கம்

* ராமேஸ்வரத்தில் இருந்து காசி வரை ஆன்மிக பயணம்
* அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ராமேஸ்வரம்  ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான  திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட  அறிவிப்புகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில்  ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில்,  முதன்மை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,  முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்தாண்டு மானியக் கோரிக்கையில் இந்து  சமய அறநிலையத்துறையின் சார்பில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு பக்தர்களின்  பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

கோயில்  யானைகளுக்கு புதிய குளியல் தொட்டி அமைப்பது தொடர்பாகவும், மாதந்தோறும்  பவுர்ணமி நாட்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் 108 திருவிளக்கு பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி  கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு ஆன்மிக பயணம்  அழைத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

Tags : Ramanatha Swamy ,Meenakshiamman ,Arunachaleswarar Temple , Ramanatha Swamy, Meenakshiamman, Arunachaleswarar Temple All Day Annadana Project: Coming Soon
× RELATED சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு