ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்; உருட்டுக்கட்டையால் அடித்து 2 மகள்கள் படுகொலை: குடிபோதையில் தந்தை வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர்: குடிபோதையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 மகள்களை உருட்டுக்கட்டையால் அடித்து படுகொலை செய்த தந்தை, ஒரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.படப்பை ஒரகடம் அருகே சின்ன மதுரபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). பேக்கரிகளில் ஸ்வீட் தயாரிக்கும் மாஸ்டர். இவரது மனைவி கீதா (38), நத்தாநல்லூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நந்தினி (16), நதியா (14),  தீபா (9) என்ற மூன்று மகள்கள் ஒரு மகன்.

இந்நிலையில், கோவிந்தராஜ்  சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு மனைவி, மகள்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் கோவிந்தராஜ் குடித்துவிட்டு மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் மனமுடைந்த மகள் நதியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் போதையில் மீண்டும் கோவிந்தராஜ் தனது மனைவி, மகள்களுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கீதா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது மகள்கள் நந்தினி, தீபா மற்றும் மகன் வீட்டில் இருந்துள்ளனர்.

மதியம் வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் கோவிந்தராஜ். இதை கண்ட இரு மகள்களும் கோவிந்தராஜிடம் சண்டை போட்டுள்ளனர். மது போதையில் இருந்த கோவிந்தராஜ், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் இரு மகள்களையும் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதனை கண்ட மகன் வீட்டில் இருந்து கூச்சலிட்டபடி வெளியில் ஓடி வந்துள்ளான். கோவிந்தராஜ் அடித்ததில் இரு மகள்களும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிர் இழந்தனர்.குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்து ஓடிச்சென்ற கோவிந்தராஜ் ஒரகடம் காவல் நிலையில் சரண் அடைந்துள்ளார். பின்னர் ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் தனது இரு மகள்களையும் உருட்டுக்கட்டையால் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: