×

இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: 5,529 காலி பணியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்

* தமிழகத்தில் 4012 மையங்களில் நடக்கிறது
* கண்காணிப்பு பணியில் 71 ஆயிரம் பேர்

சென்னை: தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடக்கிறது. 5,529 காலி பணியிடத்துக்கு நடைபெறும் தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 1,15,843 பேர் எழுதுகிறார்கள். கண்காணிப்பு பணியில் 71 ஆயிரம் ஆசிரியர், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதற்கான முதல்நிலை தேர்வு இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், மாற்றுத் திறனாளிகள் 14,531 பேர். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடக்கிறது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும்.

காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். சரியாக 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும், பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவை டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ளது. தேர்வு பணியில் 4012 தலைமை கண்காணிப்பாளர், 58,900 கண்காணிப்பாளர்கள், 323 பறக்கும்

படையினரும், மொபைல் டீம் 993 பேர், 6,400 பரிசோதனை குழு என தேர்வு பணியில் சுமார் 71 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் எழுதுகின்றனர். மிக குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இருக்கும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

பொது அறிவில் 75 கேள்விகள், திறனறிவு தேர்வில் 25 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த ேபாலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் தேர்வு கூடங்களுக்கு தேர்வாணையம் அறிவித்துள்ள நேரத்திற்குள் வர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் நல்லது. இன்று நடைபெறும் தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வார நாட்கள் அட்டவணைப்படி இன்று 3,233 பஸ்கள் இயக்கம்
மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வழக்கமாக வார இறுதி நாட்களில் சென்னை முழுவதும் 2,576 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இன்று குரூப் 2 தேர்வு நடைபெறுவதால் பேருந்து இயக்கத்தை குறைக்கக் கூடாது என கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 7 மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்போரின் வசதிக்காக வார நாட்களில் இயக்கப்படுவதைப் போல 3233 மாநகர பேருந்துகள் இயக்க உத்தரவிட்டுள்ளோம். அதன்படி, அனைத்து பேருந்துகளும் இன்று தடையின்றி இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Today Group 2, Group 2A exam: 11.78 lakh people are writing for 5,529 vacancies
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...