தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் டாக்டர் தம்பதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களாக பணியாற்றும் ஆனந்த், அவரது மனைவி வனிதா ஆகியோர் நேற்று தங்கள் 5 வயது மகனுடன் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் திடீரென அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாக்டர் தம்பதியினர் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், நாங்கள் இருவரும் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களாக கடந்த 2017ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை சுகாதார பணிகள் துணை இயக்குனர், கண்காணிப்பாளர் ஆகியோர் பணி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் எங்களால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை. இது தொடர்பாக மேலதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.