×

உடல் எடை ஒரு பிரச்னையா?

நடிகைள், மாடல்கள் ஏன் நிறைய இளம் பெண்கள் உட்பட பலரும் மிகக்குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைத்து ஷாக் கொடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும் இந்த அதிவேக எடைக் குறைப்பில் பெரும்பாலும் அழகு, தோலின் பளபளப்பு, எல்லாம் காணாமல் போய் ஒரு ஆணுக்கான முகவெட்டு தோற்றமாக மாறிவிடுகிறார்கள். சிலர் அதிக வயதான தோற்றத்துக்கு போவதும் நடக்கிறது. என்ன காரணம்?

‘‘அடுத்த மாசம் கல்யாணம்  ஒரே மாசத்துல 10 கிலோ குறைக்கணும், முடியுமா?’’ …இப்படித்தான் பலரும் என்கிட்ட கேட்கறாங்க. குறைக்கலாம் ஆனால் ஹார்மோன் பிரச்னைகள் துவங்கி குழந்தை பாக்கியம் கூட இல்லாமல் போகும் பரவாயில்லையான்னு கேட்ட பிறகுதான் பிரச்னை புரியுது அவங்களுக்கு’’ என்று விரிவாக பெண்கள் உடல் எடை குறைப்பு வழிகள் குறித்து பேசினார் பிட்னஸ் எக்ஸ்பர்ட் அசோக் குமார்.

‘‘கண்டிப்பான முறையிலே டயட் பின்பற்றி, முறையா உடற்பயிற்சி செய்தால் கூட அதிக பட்சம் ஒரு மாசத்துக்கு 5 கிலோ வரைதான் குறைக்க முடியும். இவங்க ஒரு மாசத்துல 10 கிலோவில் துவங்கி 15 கிலோ வரை குறைக்கணும்னு கேட்கிறாங்க. ஸ்டீராய்டு, ஊசி, மாத்திரைகள் இதெல்லாம் கொண்டு குறைக்கலாம். சிலர் குறைக்கவும் செய்யறாங்க. ஆனால் இது ஆபத்து.

பெண்மைக்கான ஹார்மோன்கள், மற்றும் கருமுட்டை இதிலெல்லாம் பிரச்னைகள் உண்டாகும். குறிப்பா வேகமான உடல் எடை குறைப்பை உடல் ஏத்துக்க முடியாம தாடை, கன்னங்கள், கைகள்ல உள்ள தோல் எல்லாம் சுருங்கி, பெண்களுக்கென இருக்கும் அழகு மறைஞ்சு, வயதிற்கே உரிய தோற்றம் மாறி இன்னும் வயசானவங்களாதான்  தெரிவாங்க.

உடல் எடைக் குறைக்க வெயிட் லிஃப்ட் எல்லாம் எடுத்து, டம்பெல்ஸ் எல்லாம் தூக்கி பயிற்சி எடுக்கணும்னு அவசியம் இல்லை. முறைப்படி நேரத்துக்கு சாப்பிட்டு, தூங்கினாலே பாதி உடல் எடைப் பிரச்னையைக் கட்டுக்குள்ள கொண்டு வந்திடலாம். காலையிலே 5 முதல் 6 மணிக்குள்ள எழுந்திருச்சு ஒரு சின்ன வாக்கிங் அல்லது மெதுவான ஓட்டம் இருந்தால் கூட போதும்.

சின்னச் சின்ன அசைவுகள் இதெல்லாம் செய்துட்டு எழுந்து 1 - 2 மணி நேரத்துக்குள்ள ஏதாவது சாப்பிடணும். 6 மணிக்கு எழுந்தா 8 மணிக்குள்ள காலை உணவு, 1.30 மணிக்குள்ள மதிய சாப்பாடு, இரவு 8 மணிக்குள் இரவு உணவு... குறிப்பா 10 மணிக்கு எலெக்ட்ரானிக் கருவிகளை ஓரம் கட்டிட்டு 10.30 மணிக்கெல்லாம் தூங்க போயிடணும். இதனை பின்பற்றினாலே நீங்க சீரான வாழ்க்கை முறைக்குள் வந்திடுவீங்க.

அதன் பிறகு சாப்பாட்டிலே சின்னச் சின்ன மாற்றங்கள். ஒரு நேரம் கொஞ்சமா சாதம், காலையிலே சாலட் அல்லது ஆவியில் வேக வைத்த உணவுகள். நிறைய காய்கறிகள், பழங்கள், 3 லிட்டருக்கு குறையாம தண்ணீர், வெளிப்புற ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டில் சமைக்கிற உணவுகளை மட்டுமே சாப்பிடுற பழக்கம் இதெல்லாம் செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும். அரிசி சாதம் இல்லாத டயட் நான் எப்போதும் ஊக்கப்படுத்தறது இல்லை.

எந்த மண்ணுல இருக்கிறோமோ அந்த மண்ணுக்கான உணவை எப்போதும் தவிர்க்கவே கூடாது. அதன் பிறகு ஒரு நல்ல ஜிம்ல சேர்ந்து கார்டியோ பயிற்சிகள், வெயிட் லிஃப்ட் இதெல்லாம் உங்களுடைய சக்திக்கு ஏற்ப செய்தாலே போதும். நிச்சயம் மூன்று மாதங்கள் துவங்கி 6 மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.

ஆனால் பலர் இந்த நீண்ட மாதக்கணக்கைதான் ஏத்துக்க முடியாம ஸ்டீராய்டு ஊசி, மருந்துன்னு போறாங்க. ரூ.1000 துவங்கி லட்சங்களில் கிடைக்கும் எடைக் குறைப்பு வஸ்துகள் எப்போதுமே ஆபத்துதான். இவை சிறுநீரக பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு, குழந்தை பிறப்பதில் பிரச்னைகள் என பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

அதே சமயம் இயற்கையான முறையில் உடல் எடை குறைக்கும் போது, அழகும், இளமையும் கூடும். உடற்பயிற்சியில் அதிக அளவு வியர்வை வெளியேறும்போது தோல் பளபளப்பாகும். மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தைராய்டு மற்றும் ஹார்மோன்கள் பிரச்னை அனைத்தையும் இயற்கையான முறையிலே உடல் எடை குறைப்பதன் மூலம் சீர் செய்யலாம். சிலருக்கு சீரற்ற மாதவிடாய் கூட சரியாகும்.

ஒரு மாசம் ஜிம்முக்கு போகலைன்னாக் கூட உடல் எடை ஏறாது. ஆனால் மருந்து, ஸ்டீராய்டு எடுக்க ஆரம்பிச்சிட்டா கடைசி வரைக்கும் எடுத்துதான் ஆகணும்’’ என்ற அசோக் குமார் பெண்களுக்கான சிக்ஸ்பேக் குறித்து பேசத் துவங்கினார். ‘‘என்னைக் கேட்டா பெண்களுக்கு சிக்ஸ்பேக் அவசியமேயில்லை. விளையாட்டு மற்றும் வெயிட் லிஃப்டிங் துறையில் இருக்கும் பெண்கள் சிக்ஸ் பேக் வைக்கறது வேற.

அவங்களுக்கு சிக்ஸ் பேக் பார்க்க அழகா தெரியும். ஆனால் அதை மெயின்டெயின் செய்யறது ரொம்பக் கஷ்டம். எதுவுமே சாப்பிட முடியாது, ஏன் தண்ணீர் கூட நினைச்ச நேரத்திலே நினைச்ச அளவுக்குக் குடிக்க முடியாது. நடிகர்களே ஒரு சில படத்துக்கு வைப்பாங்க அப்பறம் பிரேக் எடுப்பாங்க... மீண்டும் வைப்பாங்க. சிக்ஸ் பேக் பொருத்தவரை அதில் கனவு, ஆசை இருந்தால் மட்டுமே அதற்கு பயிற்சி கொடுப்போம்’’ என்றார் பிட்னஸ் எக்ஸ்பர்ட் அசோக் குமார்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!