×

குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு

மும்பை:குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லியின் ஷாட்களை பாராட்டி, அவருக்கு  ஊக்கமளித்துக் கொண்டே இருந்தேன். அவர் மிகவும்  உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார் என்று பெங்களூரு அணி கேப்டன் டூபிளெசிஸ் கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் 67வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு  குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்  செய்து, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் கேப்டன் டூபிளெசிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த கோஹ்லி இந்த போட்டியில் பழைய பார்மிற்கு திரும்பினார்.  தனது சிறப்பான பேட்டிங்கினால் இந்த சீசனில் தனது 2வது அரை சதத்தை பதிவு செய்தார். 54 பந்துகளில் 2 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களை குவித்தார். மறுபுறம் டூ பிளெசிஸ் 44 ரன்களை குவித்தார்.
அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வெல் அதிரடியில் இறங்கினார். அவர் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார். இறுதியில், 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூரு 170 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு தக்கவைத்துள்ளது.

வெற்றிக்கு பின் பெங்களூர் அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறுகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் நாங்கள் விரும்பியபடி எங்களது ஆட்டம் அமையவில்லை. ஆனாலும் அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது முக்கியம். வலை பயிற்சியின் போது கோஹ்லி கடினமாக உழைத்தார். இப்போட்டியில் அவருடன் மற்றொரு முனையில் இருந்து, அவரது ஷாட்களை பாராட்டி, அவருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருந்தேன். ரக்பி போட்டியில் ஆடுவது போல அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார். பந்துவீச்சின் போது, சாஹாவை டைரக்ட் த்ரோவில் ரன் அவுட் செய்தேன். அப்போது, என்னுடைய தோள்வலிமை எப்படி என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று விரும்பினோம். மேக்ஸ்வெல்லின் அற்புதமான முதல் கேட்ச் மூலம் அது சாத்தியமானது. சில போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறோம். அதுதான் இப்போது எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்’’ என்றார்.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ‘‘கடைசி ஓவர்களில் மேக்ஸ்வெல் அடித்து ஆடிய போது, இன்னும் கூடுதலாக நாங்கள் 10 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதுதான் உண்மையும் கூட. ரன்களை குவிக்க வேண்டிய நேரத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இப்போட்டியில் இருந்து எங்கள் அணியின் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூற முடியும். அதனால் இதுபோன்ற தவறுகளை, பிளே ஆப் சுற்றில் நிச்சயம் செய்ய மாட்டோம். சாஹா காயமடைந்திருக்கிறார். அவரது காயம் குறித்த முழுமையான விபரம் இன்னும் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

மக்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி: கோஹ்லி நெகிழ்ச்சி

ஆட்டநாயகன் விராட் கோஹ்லி கூறுகையில்,  ‘‘என்னால் தொடர்ந்து சிறப்பாக ஆட முடியும். எங்களுக்கு இது ஒரு முக்கியமான  போட்டி. நடப்பு ஐபிஎல் தொடரில் அணிக்கு எனது பங்களிப்பு  அதிகம் இல்லை  என்பதில்தான் எனக்கு வருத்தம். மற்றபடி புள்ளி விபரங்களை நான்  நம்புவதில்லை. இப்போட்டியில் எனது ஆட்டம், நல்ல தாக்கத்தை  ஏற்படுத்தியிருக்கிறது. கடினமாக உழைக்கிறேன்.  நேற்று வலை பயிற்சியின்  போது  90 நிமிடங்கள் பேட் செய்தேன். அதனால் இப்போட்டியை மிகவும்  சுதந்திரமாகவும், நிதானமாகவும் எதிர்கொண்டேன். முகமது ஷமியின்  பந்துவீச்சை எதிர்கொண்டு, முதல் ஷாட் ஆடிய போதே, என்னால் ஃபீல்டர்களின்  தலைக்கு மேல் பந்தை அடித்து, பவுண்டரிக்கு அனுப்ப முடியும் என்பதை  உணர்ந்தேன். இன்று இரவு (நேற்று) சந்தோஷமானதாக அமைந்திருக்கிறது. மக்களின்  ஆதரவுக்கும், அன்புக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்’’ என்று  தெரிவித்தார்.

Tags : Gujarat ,Kohli ,Duplesis , Gujarat, Bangalore, Kohli, Duplex
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்