×

சென்னையில் வெப்பநிலை 96.8 டிகிரி வரை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் (96.8 பாரன்ஹீட்) வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு வெப்பநிலை மேலும் உயர்ந்தது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசி வருவதால், பெரும்பாலானோர் வெளியில் தலை காட்டுவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த அக்னி நட்சத்திர காலமானது வரும் 29ம் தேதி வரை நீடிக்கிறது. இதற்கிடையே வங்கக் கடலில் அசானி புயல் உருவானது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் (96.8 பாரன்ஹீட்) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மேலும் இன்றும், நாளையும் லட்சத்தீவு, கர்நாடகா-கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வட கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு கொங்கன் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல் 23ம் தேதி லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Meteorological Department , Chennai, temperature, 96.8 degrees, weather forecast
× RELATED ஓட்டுப்பதிவின் போது தண்ணீர், குடை எடுத்து செல்லுங்கள்