×

பகலில் ஊர், ஊராக சென்று நோட்டமிட்டு இரவில் கைவரிசை ஏடிஎம் மெஷினை உடைத்து ₹4.89 லட்சம் கொள்ளையடித்த நண்பர்கள் 2பேர் கைது-யூ டியூப்பில் பார்த்து கைவரிசை காட்டினர்

சேந்தமங்கலம் : புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹4.89 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற டீக்கடைக்காரர் மற்றும் அவரது நண்பரான துணி வியாபாரி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பெருமாள் கோயில் மேடு பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்குள் கடந்த 5ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், வெல்டிங் மிஷினால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த ₹4 லட்சத்து 89 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், ஏடிஎம் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலத்தைச்சேர்ந்த 2 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

சேலம் அஸ்தம்பட்டியில் டீக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரும், அதே பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துணி வியாபாரியும் சேர்ந்து, ₹4.89 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, சேலத்தில் பதுங்கி இருந்த டீக்கடைக்காரர் மற்றும் துணி வியாபாரியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
 நேற்று முன்தினம் இரவு, அவர்கள் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை போலீசார், புதுச்சத்திரம் அருகே ஏ.கே.சமுத்திரம் தனியார் பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே, போலீசார் துரத்திச் சென்று மடக்கினர். பின்னர், காரில் இருந்த 2 பேரை சுற்றிவளைத்து பிடித்து, புதுச்சத்திரம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  இதில், இருவரும் சேர்ந்து புதுச்சத்திரம் அருகே, பெருமாள் கோயில்மேடு ஏடிஎம் மையத்தில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தீவிர விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் புராஜாபாத்(32). மற்றொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமுது இம்மரான்கான்(28) என்பது தெரிய வந்தது. இவர்களில் சுரேஷ் புராஜாபாத், சேலம் அஸ்தம்பட்டியில் ராஜஸ்தானி டீக்கடை நடத்தி வருகிறார்.

முகமுது இம்மரான்கான், காரில் ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வருகிறார். துணி வியாபாரத்திற்கு செல்லும்போது மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை நோட்டமிட்டு வந்துள்ளார். அதுபோல, புதுச்சத்திரம் பெருமாள் கோயில் மேடு பகுதியில் செயல்பட்டு ஏடிஎம் மையத்தை நோட்டமிட்டு இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இருவரும் கொள்ளையடித்தது தெரிய வந்தது. உடனே, நண்பர்களான இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் கோடாரி, கடப்பாரை, காஸ் ெவல்டிங் மெஷின் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையடித்த பணத்தில் ₹1 லட்சத்து 58 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மீதி தொகையை செலவு செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக, புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண்பித்து மாவட்ட எஸ்.பி.சாய் சரண் தேஜஸ்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பழுதாகிப் போன, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத ஏடிஎம்களை எப்படி திறப்பது? என்பது குறித்து யூடியுப்பில் பார்த்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நண்பர்களான இருவரும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடித்துள்ளனர்.

மேலும், வேறு இடத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் இவர்களுக்கு தொடர்பிருக்குமா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கொள்ளை நடந்த ஏடிஎம்மில் கடந்த சில மாதங்களாகவே அலாரம் மற்றும் சிசிடிவி கேமரா சரியாக செயல்படவில்லை. இதனால், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இனிவரும் காலங்களில், அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எஸ்.பி. தெரிவித்தார். பேட்டியின்போது டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : YouTube , Chennamangalam: A tea shop owner and his gang broke into an ATM near Puducherry and looted ₹ 4.89 lakh.
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்