லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 6 பேர் கும்பல் 4 மாதங்களுக்கு பின் அதிரடி கைது-பரபரப்பு தகவல்கள்

புதுச்சேரி :  திருச்சி, துறையூர் கோணபாதை பகுதியை சேர்ந்தவர்  விஜயகுமார் (45), லாரி டிரைவர். இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று  புதுச்சேரி மேட்டுப்பாளையம், தொழிற்பேட்டைக்கு லாரியில் லோடு ஏற்றி  வந்தார். கம்பெனியில் லோடு இறக்க தாமதமானதால் விஜயகுமார் அன்றிரவு 7.30  மணியளவில் அப்பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சாப்பிடுவதற்காக  நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள், விஜயகுமாரை  திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை அவரிடமிருந்து  வலுக்கட்டாயமாக பறிக்க முயன்றனர். அவர் தர மறுக்கவே கத்தியால் சரமாரி  தாக்கினர்.  விஜயகுமார் கைகளால் தடுத்ததால் அவரது விரலில் பலத்த காயம்  ஏற்பட்டது.

 பின்னர், செல்போனை அக்கும்பல் பறித்துவிட்டு கண்இமைக்கும்  நேரத்தில் அங்கிருந்து தலைமறைவானது. காயமடைந்த விஜயகுமார், கதிர்காமம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேட்டுப்பாளையம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத  நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  கத்தியால் வெட்டி  செல்போனை பறித்துச் சென்ற மர்ம கும்பலை அடையாளம் காணும் முயற்சியில்  ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை  பார்வையிட்டும், செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலமாகவும் விசாரணை மேற்கொண்டதில்  துப்புதுலங்கியது.

 டிரைவர் விஜயகுமாரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது  புதுச்சேரி, திலாசுபேட்டை வீமன்நகர் முகேஷ் கண்ணன் (23), தமிழரசன் (21),  அஜித் (23), அருள்குமார் (19), மாதவன் (21), சுரேந்தர் (19) ஆகியோர் என்பது  தெரியவந்தது.  தனியார் கம்பெனி ஊழியராகவும், பெயிண்டராகவும் வேலை செய்யும்  இவர்கள் எப்போதும், ஒரே குரூப்பாக மதுஅருந்த செல்வார்களாம்.

புத்தாண்டு  அன்று மதுஅருந்த மேட்டுப்பாளைம் ஒட்டியுள்ள பூத்துறை பகுதிக்கு சென்று  திரும்பும்போது அடுத்தகட்ட கொண்டாட்ட செலவுக்காக அங்கு தனிமையில்  சென்றிருந்த லாரி டிரைவர் விஜயகுமாரை தாக்கி மிரட்டி செல்போனை பறித்தது  தெரியவந்தது. குற்றவாளிகள் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் கால்நடை  மருத்துவமனை அருகே போலீசார் வாகன சோதனையின்போது மீண்டும் அதேபோல் கும்பலாக  பைக்கில் வந்த போது போலீசிடம் சிக்கினர்.

அவர்களிடமிருந்து 3 பைக், 2  கத்திகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் வீடுகளை சோதனையிட்டு  பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட 6 பேர் கும்பலும் மாஜிஸ்திரேட் முன்  ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக  இக்கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளில் சிலரை காவலில் எடுத்து  விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிறப்பாக செயல்பட்டு  வழிப்பறி கும்பலை 4 மாதங்களுக்குபின் கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசாரை,  வடக்கு எஸ்பி பக்தவச்சலம் பாராட்டினார்.

Related Stories: