×

திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டு உடைத்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை

* ₹1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
* சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி திருட முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், பெட்டிக் கடை, டீ கடை, துணி கடை, பானி பூரி கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு சென்றனர். மீண்டும் நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்கும் போது, கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

துணி கடையில் வைத்திருந்த ₹10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகை கடையில் இருந்த ₹2 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. மேலும், மளிகை கடை, துணிகடையில் இருந்த ₹1 லட்சம் மதிப்பிலான பொருட்களும் திருடுபோயிருந்தது தெரியவந்தது. 3 கடைகளில் முழுமையாக பூட்டு உடைந்திருந்தது. மற்ற கடைகளில் பூட்டுகளை உடைக்க முயற்சி நடந்து, பாதியில் கைவிடப்பட்டுள்ளது,அதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வணிக வளாகத்தில் பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், முகமூடி அணிந்த ஒரு மர்ம ஆசாமி, நள்ளிரவு 1 மணியளவில், கடைகளின் பூட்டுகளை இரும்பு கம்பியால் உடைப்பது தெரியவந்தது.

சாலையில் வாகனங்கள் கடந்து செல்லும் போது, தரையில் படுத்துக்ெகாள்வதும், வாகனங்கள் சென்றதும் நீண்ட கம்பியால் பூட்டை உடைப்பதும், பின்னர் நிதானமாக இரும்பு கதவை திறந்துகொண்டு கடைக்குள் நுழைவதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. 8 கடைகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளார். ஆனாலும், அந்த நபர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காந்தி நகர் பைபாஸ் சாலையில் மேலும் சில இடங்களில் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, குறிப்பிட்ட நேரத்தில் அந்த மர்ம நபர் எந்த பகுதியில் இருந்து வந்தார், அவருடன் வேறு சிலர் வந்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பூட்டுக்களை உடைக்கும் நபர், அதற்கான ஆயுதங்களை தயாராக பையில் கொண்டு வந்திருக்கிறார். அதை ஒவ்வொன்றாக பயன்படுத்துகிறார். எனவே, திருட்டு குற்றங்களில் ஏற்கனவே ஈடுபட்டு கைத்தேர்ந்த நபராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த காட்சி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Asami ,Thiruvannamalai Gandhinagar , Thiruvannamalai: CCTV footage of a masked Marma Asami trying to break the locks of 8 shops in a row in Thiruvannamalai.
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...