×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் மீண்டும் மயில் சிலை தேடுதல் வேட்டை: போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்

ெசன்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் மீண்டும் 10 மணி நேரமாக மயில் சிலையை போலீசார் ேதடினர். ஆனால், சிலை கிடைக்காத நிலையில், கோயிலுக்குள் புதைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ம் திருப்பணி மேற்கொள்ளப்பட்ட போது, புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை, ராகு, கேது சிலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து, பிரசன்னம் பார்க்கப்பட்டு, அந்த சன்னதியில் புதிய சிலைகள் வைக்கப்பட்டன. பொதுவாக, பழைய சிலையை புதைக்க வேண்டும், இல்லை, தண்ணீரில் போட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், இந்த சிலைகள் எங்கே வைக்கப்பட்டது என்ற விவரம் கோயில் நிர்வாகத்திடம் இல்லை.

இந்த நிலையில், புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த சிலைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாயமான சிலைகள் கோயில் தெப்பக்குளத்தில் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 14ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோளின்படி பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 5 நாட்கள் சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் நந்தி சிலை, பாம்பு சிலை உள்பட 3 சிலைகள் குளத்தில் இருந்து மீட்கப்பட்டன. முக்கியமாக கருதப்பட்ட மயில் சிலை கிடைக்கவில்லை. மீண்டும் கடந்த 17ம் தேதி காலை 7.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சிலையை தேடினர். ஆனால், சிலை கிடைக்காத நிலையில் போலீசார் திரும்பினர்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் 25 பேர் நேற்று மீண்டும் சிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரமாக தேடியும் சிலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே, மயில் சிலை கோயிலுக்குள்ளேயே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. எனவே, கோயிலுக்குள் சிலை புதைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Mylapore Kabaliswarar Temple ,Theppakulam Peacock Statue , Mylapore Kabaliswarar Temple, Theppakulam, Peacock Statue Search Hunting,
× RELATED மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில்...