ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது: 200 கிராமங்கள் துண்டிப்பு

ஆம்பூர்:  ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில், குடியாத்தம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மழை வெள்ளத்தில் நேற்று காலை  அடித்து செல்லப்பட்டது.  இதனால் 200 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக மற்றும் ஆந்திர எல்லைபகுதிகளான வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாறு, நரியம்பட்டு வழியாக வரும் கொட்டாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பச்சகுப்பம் அருகே 2 ஆறுகளும் கலக்கும் இடத்தில் அதிக வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

கடந்த வடகிழக்கு பருவ மழையில் ஏற்பட்ட பாலாற்று வெள்ளப்பெருக்கால் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சேதம் அடைந்ததால் பாலாற்றில் மண் கொட்டி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட  தரைப்பாலம் மற்றும் நீர் செல்ல வைக்கப்பட்ட ராட்சத சிமென்ட் பைப்புகள் ஆகியவை நேற்று  காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் கல்வி, மருத்துவம், அரசு, வங்கி மற்றும் இதர பணிகளுக்காக மாதனூர், குடியாத்தம் இடையே சென்று  வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 200 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதன் காரணமாக முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாவும், சுமார் 40 கிமீ சுற்றி வந்து தங்களது பணிகளை முடிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், மணல் கொள்ளையர்களால் தொடர்ந்து அப்பகுதியில் மணல் திருட்டு நடந்ததால் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் அமைத்து தர  வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலறிந்த திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்எல்ஏ வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: