×

சிதம்பரத்தில் காங்கிரஸ் போராட்டம் பேரறிவாளன் குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளிக்கப்படவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

சிதம்பரம்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் விடுதலை செய்ததது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து வெள்ளை துணியால் வாயை கட்டி காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை என சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது. தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது  கேள்விக்குறியாகி உள்ளது. ராஜிவ்காந்தியோடு சேர்த்து 9 போலீசார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜிவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மன நிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக்கூறி  தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது. கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? இது நியாயமற்ற செயல். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொள்கை வேறு. கூட்டணி வேறு. எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப் போவதில்லை. அவர்களது கொள்கைகளைப்பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை. யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள்  என சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது அவர்களது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது என்றார்.

Tags : Congress ,Chidambaram ,Perarivalan ,Alagiri , Congress struggle in Chidambaram Perarivalan not convicted: KS Alagiri interview
× RELATED சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார...