பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரசார் போராட்டம்: சென்னை மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசார் முக்கியமான இடங்களில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு, வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டம் நடத்துமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காங்கிரசார் நேற்று பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணியை கட்டிக் கொண்டு அறவழிப் போராட்டம் நடத்தினர்.  

 சென்னையில் மாவட்ட தலைவர்களின் தலைமையில் அந்தந்த மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்திபவனில் மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்திபவன் நுழைவுவாயில் திரண்டு நின்று, வாயில் துணியை கட்டிக் கொண்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி தலைவி சுதா மற்றும் நிர்வாகிகள் சுமதி அன்பரசு, மயிலை தரணி, கீழானூர் ராஜேந்திரன், மயிலை அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் சத்தியமூர்த்திபவன் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோன்று, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் தண்டையார்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில்,மாநில துணை தலைவர் உ.பலராமன், மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஏ.வாசு,  டி.வி.துரைராஜ், கவுன்சிலர் தீர்த்தி, தேசியமணி, கண்ணப்பன், கே.பி.துரை, பத்மநாபன், ஆபிரகாம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாயில் வெள்ளை துணியை கட்டிக் கொண்டு, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா நகர் தொகுதி 2வது சர்க்கிள் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரங்கபாஷ்யம் தலைமையில் அறவழிப் போராட்டம் அமைந்தகரை சிசி வங்கி அருகில் நடைபெற்றது. சர்க்கிள் தலைவர் எம்.ஆர்.ஏழுமலை முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், பிஆர்.ராஜேந்திரன், கார்டன் கிருஷ்ணன், சண்முகம், பாலன், ராகுல்காந்தி, லெனின்குமார், நந்தகோபால், தாமஸ், கோவிந்தன், வேலுச்சாமி, செல்லம்மாள், பவானி, லாவண்யா, ஏம்மா, சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.   இதேபோன்று, மாவட்ட தலைவர்கள் அடையார் துரை, முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், நாஞ்சில் பிரசாத் ஆகிய மாவட்ட தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வாயில் வெள்ளை துணி கட்டிக் கொண்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: