×

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரமோற்சவ தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையொட்டி தினமும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை உற்சவம்,  தங்க பல்லாக்கு, யாழி வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று அதிகாலையில் நடந்தது. கோயில் மண்டபத்தில் பெருமாளை மல்லி, ரோஜா உள்பட பல்வேறு மலர்களால் அலங்கரித்து, நீலம், தங்க பச்சை நிறப் பட்டு உடுத்தி வைரம், வைடூரியங்களுடன் ராஜ அலங்காரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

பின்னர்  கோயிலில் இருந்து  உற்சவர் வரதராஜ பெருமாளை தேரடி பகுதிக்கு அழைத்து வந்து, அதில் அவரை அமர்த்தி சிறப்பு ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், டிஐஜி சத்யபிரியா, எஸ்பி சுதாகர், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், சந்துரு மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரின் பின்புறம் 6 பொக்லைன் இயந்திரங்கள் தள்ளிக் கொண்டும், முன்புறம் ஒரு பொக்லைன் இழுத்துக் கொண்டு சென்றன. அப்போது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணா என்ற கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு வழிநெடுகிலும் ஆன்மிக நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்பி சுதாகர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் செய்தன.

Tags : Kanji Varadaraja Perumal Temple Charitham Festival , Kanchi Varatharaja Perumal Temple, Chariot Festival, Devotees Darshan
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...