×

34 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சித்துவுக்கு ஓராண்டு சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி:  கொலை வழக்கில் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு சித்துவும், அவரது நண்பர் ருபிந்தர் சிங் சந்துவும் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா, ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே சாலையின் நடுவில் தங்கள் காரை நிறுத்தினர். அப்போது காரில் வந்த 65 வயதான குர்னாம் சிங் என்ற நபர் ​​​​அவர்களை நகரச் சொல்லியதால், சித்துவும், அவரது நண்பரும் குர்னாம் சிங்கை தாக்கினர். இதில், குர்னாம் சிங் உயிரிழந்தார். கடந்த 1999 செப்டம்பர் 22 அன்று செசன்ஸ் நீதிமன்றம்  சித்துவை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதனை எதிர்த்து குர்னாம் சிங் குடும்பத்தினர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு, சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் சித்து  மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு விசாரித்த நீதிமன்றம், சித்துவை விடுதலை செய்து, ₹1000 அபராதம் விதித்தது. குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் உச்சநீ திமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். மனுவில் சித்துவுக்கு சற்றே கடினமான தண்டனையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர்,எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தனர். இவ்வழக்கில் 34 ஆண்டுகளுக்கு பின்னர் சித்துவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



Tags : Sidhu ,Supreme Court , Sidhu jailed for one year for murder 34 years ago: Supreme Court verdict
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...