மபி.யில் உள்ள எஸ்.ஆர்.கே, பல்கலைக் கழகத்தில் தேர்வே எழுதாத மாணவர்களுக்கு போலியாக பட்டம் வழங்கி மோசடி: துணை வேந்தர், முன்னாள் துணை வேந்தர் கைது

திருமலை: போபாலில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் எழுதாத, வருகை பதிவு இல்லாத மாணவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பட்டம் பெற்றதாக  சான்றிதழ் விற்று மோசடி செய்ததாக துணை வேந்தர், முன்னாள் துணை வேந்தர் ஆகியோரை ஐதராபாத் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐதராபாத் சிறப்புப் புலனாய்வுக் குழுவு போலீஸ் கமிஷனர் ஏ.ஆர்.னிவாஸ் நேற்று முன்தினம் கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் உள்ள மலக்பேட், ஆசிப் நகர், முஷிராபாத் மற்றும் சதர்காட் காவல் நிலையங்களில் போலி பட்டப்படிப்பு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளும் சிறப்பு கண்காணிப்பு மற்றும் விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாற்றப்பட்டது.

இதில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள எஸ்ஆர்கே பல்கலைக்கழகம் சார்பில் மொத்தம் 101 கல்விச் சான்றிதழ்களை மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.  இதில், மாணவர்களிடம் இருந்து 44 சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. இந்த 44 சான்றிதழ்களில், 13 பி’ டெக் மற்றும் பிஇ படிப்புகளை சேர்ந்தவை. மீதமுள்ள 31 எம்பிஏ, பிஎஸ்சி போன்ற பல்வேறு பட்டச் சான்றிதழ்களாகும்.

இந்த வழக்கில் இன்சார்ஜ் துணைவேந்தர் டாக்டர் சுனில் கபூர் முன்ஜாமீன் பெற்ற நிலையில்,  எஸ்ஆர்கே பல்கலைக் கழகத்தின் உதவி பேராசிரியர் கேதன் சிங் மற்றும் ஐதராபாத் நகரின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஏழு முகவர்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதில் ஆறு மாணவர்களின் பெற்றோர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். மேலும் ஆறு மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.கே. பல்கலைக் கழகம் உள்ள போபாலுக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களான தற்போதைய துணைவேந்தர் டாக்டர் எம்.பிரசாந்த் பிள்ளை மற்றும் ஓய்வு பெற்ற துணைவேந்தர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ். எஸ்.குஷ்வாஹ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், எஸ்ஆர்கே பல்கலைக் கழகத்தில் குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ளவர்கள் மற்றும் மோசடியாக சான்றிதழ் பெற்ற மாணவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: