×

செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருக்கும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, விரைவில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
செக் மோசடி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி ஒரு தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதில், ‘மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் செக் பவுன்ஸ் உள்ளிட்ட மோசடி தொடர்பான வழக்குகள் அதிகப்படியாக நிலுவையில் இருக்கின்றன. இதனை தீர்த்து வைப்பதற்கு சிறப்பு மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றங்களை வேண்டுமானால் அமைக்கலாம்,’ என தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் இயங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் இந்த தீர்ப்பு தொடர்பான விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட ஐந்து மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.

Tags : Court in 5 states to investigate Czech fraud
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை