காஷ்மீர் மதுபான கடையில் தாக்குதல்: 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக 5  லஷ்கர் தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், டிவன் பக் பகுதியில் மதுபான கடை மீது பர்தா அணிந்து வந்த பெண் தாக்குதல் நடத்தினார். இதில் ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ரஞ்சித் சிங் என்ற ஊழியர் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 கைத்துப்பாக்கிகள், 23 கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: