×

பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 19.1.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.

இதை தொடர்ந்து, பிரதமருக்கு கடந்த 16ம் தேதி பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் கடிதம் எழுதினார். இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரின் கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்து, பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Union Minister , Cotton, yarn prices, action, Union Minister, Chief MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...