×

மாதனூர்-குடியாத்தம் இடையே தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது: 200 கிராமங்கள் துண்டிப்பு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் அமைக்கபட்ட தற்காலிக பாலம் வெள்ளத்தால் இன்று காலை அடித்து செல்லப்பட்டது. இதனால் 200 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் ஆந்திர எல்லைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் பாலாறு, நரியம்பட்டு வழியாக வரும் கொட்டாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பச்சக்குப்பம் அருகே இரு ஆறுகளும் கலக்கும் இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் தரைப்பாலம் மற்றும் காவிரி குடிநீர் பைப்லைன் ஆகியவை பலத்த சேதமடைந்தன.

இதையடுத்து பாலாற்றின் குறுக்கே ராட்சத பைப்புகள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் 200 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சுமார் 40கிமீ தூரம் சுற்றிச்சென்று தங்களது பணிகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Madhanur-Gudiyatham , Madhanur-Gudiyatham, temporary, bridge, beaten
× RELATED யானை தாக்கி விவசாயி பலி