காரைக்குடி அருகே இரு தரப்பு மோதல் போலீசார் சமரசத்துக்குப் பின் அம்மன் கோயில் தேரோட்டம்

காரைக்குடி: காரைக்குடி கோயில் திருவிழாவில் தேரோட்டம் நடத்த விடாமல், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. போலீசாரின் சமரசத்தால் தேர் மீண்டும் புறப்பட்டது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. கோயில் முன்பு புறப்பட்ட தேர் மேளதாளம் முழங்க, 4 கி.மீ தொலைவில் உள்ள சங்கம்திடல் காட்டம்மன் கோயில் முன்பு வந்தடைந்தது. அப்போது இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில் ஒருதரப்பை சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. கோயில் கமிட்டியினர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை காட்டம்மன் கோயிலில் இருந்து கொப்புடைய நாயகி அம்மன் கோயிலுக்கு தேர் புறப்பாடாகும் வைபவம் துவங்க இருந்தது. அங்கு வந்த இருதரப்பினரும், முதல் நாள் நடந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல் தேரோட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என தேர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேரோட்டம் தடைபட்டது. அங்கு வந்த காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், டிஎஸ்பி வினோஜி, போலீசார் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார், டிஎஸ்பி உறுதி அளித்ததால், தேர் மீண்டும் புறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: