×

கோவில்பட்டி அருகே ஒரே நாளில் 2 சலூன் கடை உள்பட 3 கடைகள் எரிந்து நாசம்: ரூ.30 லட்சம் பொருட்கள் சேதம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் ரயில்வே காலனியை   சேர்ந்தவர் கோமதி (53). இதே ஊர், மேலத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி   (40). சகோதரர்களான இவர்கள் இருவரும் நாலாட்டின்புத்தூர் முக்கு ரோட்டில்   அடுத்தடுத்து சலூன் கடைகள் வைத்துள்ளனர். இவர்களது கடைக்கு அருகில் இதே ஊர்,   மேட்டுத் தெருவைச் சேர்ந்த குருசாமி (37) என்பவர் பெட்டிக்கடையுடன்   சேர்ந்து டீக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 4 மணி அளவில்   குருசாமியின் பெட்டிக் கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று   பலமாக வீசவே, தீ மளமளவென அருகில் உள்ள 2 கடைகளுக்கும் பரவியது. கோமதி   கடையின் உள்ளே கார்த்தி என்பவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தீயின்   வெக்கையை உணர்ந்த அவர் அலறியடித்துக் கொண்டு கடைக்கு வெளியே வந்து   பார்த்தார். அப்போது 3 கடைகளிலும் தீ கொழுந்து விட்டு எரியவதை கண்ட அவர்,   கடை உரிமையாளர் கோமதிக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் மற்றும்   நாலாட்டின்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 3 கடைகளுக்கும் பரவிய தீயை மேலும்   பரவ விடாமல் அணைத்தனர். இந்த விபத்தில் சலூன் கடைகளில் இருந்த சோபாக்கள்,   கண்ணாடிகள், டிவி, ரவுன்ட் சேர், கோமதி கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவை கருகின. குருசாமியின் பெட்டி   கடையில் இருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி., மற்றும் சிகரெட், டீத்தூள்   பாக்கெட்டுகள் ஆகியவையும் தீக்கிரையாயின. சேத மதிப்பு   ரூ.30 லட்சம் இருக்கும். இதுகுறித்து   நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தொழில் போட்டியில்  யாரும்  கடைகளுக்கு தீ வைத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில்  விசாரணை  நடத்தி வருகின்றனர்.



Tags : Kovilpatti , In a single day near Kovilpatti 3 shops burnt down, including 2 saloon shops: Rs 30 lakh worth of goods damaged
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!