×

பாலக்கோடு அருகே காப்புக்காட்டில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு சிறுத்தையை தேடும் வனத்துறை: கூண்டு வைத்து பிடிக்க முடிவு

தர்மபுரி: பாலக்கோடு அருகே காப்புக்காட்டில் ட்ரோன் கேமரா பறக்க விட்டு, சிறுத்தையை வனத்துறையினர் நேற்று தேடினர். ஆனால், கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காவேரியப்பன் கொட்டாய், வாழைத்தோட்டம் சுற்றுவட்டார பகுதிகளில், வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள், கோழிகள் இரவு நேரங்களில் மாயாமானது. மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் கோழியை கவ்வி தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் நடமாடி வருவது சிறுத்தை என்பதை பாலக்கோடு வனத்துறையினர் உறுதிசெய்தனர். இந்த சிறுத்தை நள்ளிரவிலும், அதிகாலை நேரத்தில் மட்டுமே ஊருக்குள் புகுந்து, இதுவரை 50க்கும் மேற்பட்ட கோழிகளையும், ஆடுகள், தெரு நாய்களை பிடித்து சென்றுள்ளது.

இதையடுத்து, அருகிலுள்ள மலை பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு, சிறுத்தை நடமாட்டத்தையும், அது பதுங்கியிருக்கும் இடத்தை கண்டறியவும் பாலக்கோடு வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காவேரியப்பன் கொட்டாய், வாழைத் தோட்டம் அருகே உள்ள எருதுகுட்டஅள்ளி காப்புக்காடு பகுதியில், வனவர் முனுசாமி தலைமையில் வன ஊழியர்கள் ட்ரோன் கேமராவை பறக்க விட்டனர். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக ட்ரோன் கேமரா பறந்த நிலையில், காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் தெரியவில்லை. பாறையின் இடுக்குகளில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என வன ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கிராமத்தை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம். ஊருக்குள் வந்து செல்லும் சிறுத்தை, பெண் சிறுத்தையாக இருக்கலாம் என்பதால், அது குட்டி போட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த குட்டிகளுக்கு இரையை கொண்டு சொல்லவே, பகல் நேரங்களில் மறைவான இடங்களில் பதுங்கி இருந்து, இரவு நேரத்தில் வேட்டையாடுகிறது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டு உள்ளோம்,’ என்றனர்.

Tags : Balakod , Let the drone fly the camera in the reserve near Balakot Forest Department looking for leopard: decided to keep the cage
× RELATED பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி