சென்னை விமான நிலையத்தில் லேசர் ஒளி பட்டதால் விமானி தடுமாற்றம்: பத்திரமாக தரையிறக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தபோது, விமானியின் கண்களில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் தடுமாற்றம் ஏற்பட்டது. எனினும், அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, 146 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 146 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இன்று அதிகாலை 4.50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்தது. அந்த விமானம் படிப்படியாக தரையிறங்குவதற்காக, உயரத்தை குறைத்து தாழ்வாக பறந்து வந்தது.

அப்போது விமான முன்பகுதியில் பைலட் கேபினை நோக்கி சக்திவாய்ந்த லேசர் ஒளி பாய்ந்தது. விமானியின் கண்களில் லேசர் ஒளி பட்டதால் அவர் நிலைகுலைந்து போனார். எனினும், அந்த ஒளியை சமாளித்து, விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 146 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் அந்த விமானத்தில் இருந்த 153 பேரும் உயிர் தப்பினர்.   இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ரேடார் கருவிகள் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த லேசர் ஒளியை பழவந்தாங்கலில் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து விஷமிகள் யாரோ பீய்ச்சி அடித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமானியின்மீது லேசர் ஒளியை பீய்ச்சிய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிமலை மலைப்பகுதியில் லேசர் ஒளியை விமானத்தின்மீது அடித்த சம்பவங்கள் 2 முறை நடந்துள்ளது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். தற்போது மீண்டும் விமானத்தின்மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: