×

கல்குவாரியில் சிக்கி 3 பேர் பலி நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14ம்தேதி நள்ளிரவில் தொழிலாளர்கள் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதில் 6 தொழிலாளர்கள் குவாரிக்குள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் மூலம் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 3வது நபர் உயிருடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கடும் போராட்டங்களுக்கு இடையில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். எனினும் லாரி டிரைவர் ராஜேந்திரன் பாறைகளுக்கு அடியில் சிக்கி உள்ளார். அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை மீட்கும் பணிகள் இன்று காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் மூலம் நடந்தது. மீட்பு பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எஸ்பி சரவணன் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வினோத், தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நிலச்சரிவு எதனால் நிகழ்ந்தது? என்பது குறித்து சுரங்கத்துறை வல்லுனர்கள் ஆய்வு செய்வர். இந்த கல்குவாரியில் போக்குவரத்து அனுமதி கடந்த ஏப்ரல் மாதமே நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து அதற்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2023 வரை உரிமம் இருக்கும் நிலையில் அதை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். மேலும் இதுதொடர்பாக நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டு நிரந்தரமாக ரத்து செய்யப்படும். கல்குவாரி விபத்து சம்பவத்தை தொடர்ந்து உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு கலெக்டர் கூறினார்.
எஸ்பி சரவணன் கூறுகையில், கல்குவாரி உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். உரிமையாளர் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  இவ்வாறு எஸ்பி கூறினார்.

Tags : Paddy Minerals ,Kalguari , Calcutta, 3 persons, killed, Director, Suspended
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை