×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஒகேனக்கல்லில் 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை துவங்கி விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக பெங்களூருவில் 100 மி.மீ., மழை பதிவானது. இந்த மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 25,000 கனஅடியாகவும், பிற்பகல் 3 மணியளவில் 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால் அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மெயினருவியில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,030 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 9,546 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 15ம் தேதி காலை 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 109.45அடியாக உயர்ந்தது. அதன்படி, கடந்த 3 நாளில் நீர்மட்டம் 1.31 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 77.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை முழுவதும் நிரம்ப இன்னும் 16 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. நீர்வரத்தும், திறப்பும் இதே அளவில் இருந்தால், இன்னும் 10 நாளில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்தாண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி, மேட்டூர் அணை நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியது. நடப்பு ஆண்டில் முன்கூட்டியே மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதால், காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் மேட்டூர் அணை மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Caviri ,Ogenacal , Heavy rains cause flash floods in Okanagan Valley: Bathing in waterfalls is prohibited
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...