பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை, கடலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகள் சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனால் பேரறிவாளன் விடுதலையை கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்று வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளனின் விடுதலையை வன்மையாக கண்டித்தனர். நேற்றைய தினம் தமிழக காங்கிரசின் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழகம் முழுவதும் இதனை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொண்டு அறவழிப் போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 200-க்கும் அதிகமானோர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் முக்கிய கோரிக்கையாக வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதுபோன்று, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமுக்கம் மைதானம் நேரு சிலை முன்பாக வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: