×

ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு

சேலம்: ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் ஸ்டிரைக் நடத்திய நிலையில் பஞ்சு ஒரு கேண்டிக்கு  ரூ.10 ஆயிரம் அதிகரித்துள்ளதாகவும், ரூ.50 லட்சம் பேல்கள் எங்கே என்றும் நூல் வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் பஞ்சு ஒரு கேண்டி (356கிலோ) ரூ.54 ஆயிரத்திற்கு விற்றது. சில நாட்களுக்கு முன்பு ரூ.1.05 லட்சம் என விலை உயர்ந்தது.

இந்த விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், கரூர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் பஞ்சு விலை ஏறி இருப்பது உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் ராசி சரவணன் கூறியதாவது:
தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியை நம்பி 50 லட்சம் பேர் உள்ளனர். இந்தியாவில் பஞ்சு உற்பத்தியில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பஞ்சை பொறுத்தமட்டில் நாம் வட மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 3 கோடியே 40 லட்சம் பேல் பஞ்சு உற்பத்தி நடக்கிறது. கடந்த சில மாதமாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பஞ்சு, நூல் விலை அதிகரித்து வருகிறது.

வட மாநிலங்களில் பஞ்சை ‘‘ஒயிட் கோல்டு’’ வெள்ளை தங்கம் என சொல்லி, இத்தொழிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பஞ்சை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். சுமார் 50 லட்சம் பேல்கள் எங்கே போனது என்று தெரியவில்லை. பஞ்சை வாங்குபவர்கள் ஒன்றிய அரசுக்கு தெரியாமல் கொள்முதல் செய்ய முடியாது. அப்படி இருக்கையில் ஏன் ஒன்றிய அரசு பஞ்சு பதுக்கலை கண்டும் காணாமல் இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நூல் விலையை கண்டித்து கடந்த 16ம் தேதி தமிழக அளவில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்தனர். எப்போதும் ஒரு போராட்டத்திற்கு பிறகு பஞ்சு, நூல் விலை குறையும். ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு கேண்டி ரூ.1.05 லட்சமாக விற்ற பஞ்சு கடந்த மூன்று நாளில் ரூ.10 ஆயிரம் அதிகரித்து ரூ.1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் ஒன்றிய அரசு, பஞ்சு பதுக்கலை கண்டறிந்து விலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Strike , Textile Manufacturer, Strike, Cotton Prices Rise
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை