அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு

சிதம்பரம்:  சிதம்பரம் தனியார் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (26). இவர் கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால், சிதம்பரம் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வினாத்தாள் பாதுகாப்பு அறை முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று அதிகாலை வினாத்தாள் அறை பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென காவலர் பெரியசாமி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சென்ற சிதம்பரம் நகர போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் எஸ்பி சக்திகணேசன் அந்த பள்ளிக்கு வந்து, உடன் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் எஸ்பி சக்திகணேசன் கூறுகையில், பாதுகாப்பு பணியில் இருந்தபோது காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறு விபத்தில் சிக்கினார்.

விடுமுறை முடிந்து பணிக்கு வந்தபோதும் மேலும் லீவு வேண்டுமா என அதிகாரிகள் கேட்டுள்ளனர். உள்ளூரிலேயே இருப்பதால் பணியில் சேர்ந்து கொள்கிறேன் என கூறி பணியில் சேர்ந்துள்ளார். இறப்பதற்கு முன்பாக செல்போனில் பேசி இருக்கிறார். அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். திருமணம், காதல் ஆகிய இரண்டு பிரச்னைகள் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார். பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: