×

மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே அங்கு ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதால் அனைவராலும் அறியப்பட்டார். இதையடுத்து, ஹர்திக் படேல் 2019ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அவர் காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். சமீபத்தில், சமூக வலைதள பக்கங்களில் இருந்து குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து வெளியேறலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹர்திக் படேல் காங்கிரசில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில், ``காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன். இதனை எனது ஆதரவாளர்கள், குஜராத் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். இனிமேல் மாநிலத்தின் நலனுக்காக சிறப்பாக உழைக்க முடியும் என்று கருதுகிறேன்,” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஹர்திக் படேல் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரசை நேர்வழியில் திசை திருப்ப எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் நாடு, சமுதாயத்தின் நலனுக்கு எதிராகவே காங்கிரஸ் தொடர்ந்து பணியாற்றுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நான் கவனித்ததில் இருந்து ஒன்றிய, மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதையும் எதிர்ப்பதே கிடையாது. ராமர் ஜென்ம பூமி, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜிஎஸ்டி அமல் என எந்த விவகாரத்தை எடுத்தாலும் காங்கிரஸ் கட்சி சாலை மறியலில் மட்டுமே ஈடுபட்டது.

நாடு, குஜராத், படேல் சமூகம் தொடர்பான பிரச்னைகளில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எதை செய்தாலும் எதிர்ப்பது ஒன்றே காங்கிரசின் நிலைப்பாடாக இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் மக்களால் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் அவர்களுக்கு மக்களுடன் தொடர்பு இல்லாததே ஆகும். குஜராத் மக்கள் பிரச்னைகள் குறித்து குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் பேச சென்றால், அவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், தங்களது மொபைல்களில் வரும் செய்திகளை பார்ப்பதிலேயே குறியாக உள்ளனர். எந்த விஷயத்திலும் சீரியஸ்னெஸ் இல்லாததே காங்கிரஸ் மூத்த தலைவர்களின் முக்கிய பிரச்னையாக உள்ளது.

நாடு பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நேரத்தில், கட்சிக்கு தலைமைத் தேவைப்படும் நேரத்தில், அவர் மகிழ்ச்சியுடன் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குஜராத், குஜராத்திகளை வெறுப்புடன் நடத்துகின்றனர். பிறகு எப்படி குஜராத்தை ஆளுவதற்கு குஜராத்திகள் மட்டுமே சரியான மாற்று என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. அரசியல், மதம், வணிகம் என எந்த துறையை எடுத்தாலும் குஜராத்திகளை தொடர்ந்து அவமானப்படுத்தும் காங்கிரசில் ஏன் தொடர வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் இருக்கும் போது தோன்றுகிறது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாநிலத்தின் எந்த பிரச்னை பற்றியும் கவலைப்படாமல், டெல்லியில் இருந்து வந்துள்ள தலைவர்களுக்கு குறித்த நேரத்தில் சிக்கன் சாண்ட்விச் டெலிவரி ஆனதா? என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து ராஜஸ்தானில் சிந்தனை அமர்வு என்ற 3 நாட்கள் மெகா கூட்டம் நடந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து 430 மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், குஜராத் மாநில செயல் தலைவரான ஹர்திக் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் முடிந்த நிலையில், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் படேல் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாஜவில் சேருகிறார்?
குஜராத் மாநில செயல் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ள ஹர்திக் பட்டேல், விரைவில் பாஜவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் வெற்றி பெற்று 6வது முறையாக தொடர்ந்து ஆட்சி பிடிக்க பாஜ வியூகம் அமைத்து வருகிறது. அதன்படி, ஹர்திக் பட்டேலை இழுக்க பாஜ கடந்த சில மாதங்களாகவே ரகசிய ஆபரேஷன் செய்து வந்தது. இதில் தற்போது பாஜ வெற்றியும் கண்டுள்ளது. சமீப காலமாக அவர் பாஜவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜ.வின் திரைக்கதை
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷக்திசிங் கோஹில் கூறுகையில், ``படேல் நேர்மையற்றவர், சந்தர்ப்பவாதி. பாஜ.வுக்கு தாவும் இளைஞர் தலைவர்களுக்கு அங்கு மதிப்பில்லாமல் போகும். ஹர்திக் படேல் கடிதத்தில் அவராக எதுவும் எழுதவில்லை. பேனாவும், மையும் மட்டுமே அவருடையவை, மற்ற அனைத்தும் பாஜ. எழுதி கொடுத்த திரைக்கதையாகும். அவரது கடிதத்தில் எதுவும் உண்மையில்லை,’’ என்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.

Tags : Hardik ,Congress ,Sonia Gandhy , Mega meeting, big wicket, Hardik, Congress president Sonia Gandhi
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...