×

தமிழக முதல்வர், மனைவி உருவத்தில் பட்டுசேலை: நெசவாளர் தம்பதி சாதனை

காஞ்சிபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரின் உருவத்தை அச்சு அசலாக பட்டுச் சேலையில் வடிவமைத்து, காஞ்சிபுரம் நெசவாளி தம்பதியினர் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் விளக்கடிகோயில் தோப்பு தெருவை சேர்ந்தவர் நெசவாளர் குமரவேல் (36). இவரது மனைவி கலையரசி (32). எம்எஸ்சி பட்டதாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குமரவேல், பல்வேறு வடிவங்களில் பட்டி சேலைகளை வடிவமைத்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரின்  உருவத்தை பட்டுச்சேலையில் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து குமரவேல் கூறியதாவது:
எனது பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் என்பவரிடம் திமுக பிரமுகர் ஒருவர் பட்டு சேலையில் தமிழக முதல்வரின் உருவத்தை வடிவமைத்து தரும் வகையில் நெசவாளர்கள் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். அப்போது அவர், என்னை தொடர்பு கொண்டு, திமுக பிரமுகரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர், தக்காளி நிற பட்டு சேலையில், தூய தங்க ஜரிகையில், 12 முழம் நீளத்திலும், இரண்டே முக்கால் முழம் அகலத்திலும் ஒரு பட்டு சேலையை நெசவு செய்யும்படி கூறினார்.

அதன்படி நான், எனது மனைவியுடன் சேர்ந்து, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதி சமீபத்தில் வெளியிட்ட அவரும் நானும் என்ற புத்தகத்தின் முன்பக்க அட்டை படத்தை சேலையின் முந்தானையிலும், புத்தகத்தில் உள்ள வாசகங்களை சேலையின் உடல் முழுவதும் இருக்கும் வகையிலும் வடிவமைத்தோம். எனது தலைமையில் 4 நெசவாளர்கள், இணைந்து தொடர்ந்து 2 மாதங்கள் உழைத்து அந்த பட்டு சேலையை உருவாக்கினோம். சேலை பார்டர் முழுவதும் அவரும், நானும் என்ற எழுத்துக்கள் மட்டும் வரிசையாக இருக்கும்.

அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி வெளியான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தின் அட்டை படத்தை வெண்பட்டு வேட்டியின் கரையாகவும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் குரல் என்ற வாசகங்கள் உள்ள வெண்பட்டு அங்கவஸ்திரமும் வடிவமைத்தோம். நாங்கள் உருவாக்கிய கைத்தறி பட்டு சேலையை, சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினோம் என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பக்தர் ஒருவர், கேட்டு கொண்டபடி திருப்பாவையின் 30 பாசுரங்களும் அடங்கிய பாடல் வரிகளை சேலையில் நெய்து கொடுத்துள்ளோம் என கூறினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Paduselai , Tamil Nadu Chief Minister, Pattuselai in the form of wife, weaver couple
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...