×

அற்புதம்மாள் நடத்திய நீண்ட, நெடிய சட்டப்போராட்டம்

பேரறிவாளனை இந்தவழக்கில் இருந்து  விடுவிப்பதற்கான சட்டப்போராட்டத்தை அவரது தாயார் அற்புதம்மாள் நடத்திவந்தார். கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி  தொடங்கிய இந்த போராட்டம் இப்போது உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளிக்கும் வரை கொண்டு வந்திருக்கிறது.  தனது மகனுக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும், என் மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து போராடினார். 31 ஆண்டு காலம் கழித்து இந்த போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 12 ஆண்டுகள் போராடி இருக்கிறார்.

சட்டரீதியாக ஒருபுறம் போராடிக் கொண்டே, ஆட்சியில் இருந்தவர்களையும் ஒரு தாயாக, நேரில் சென்று தன் மகனின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன் வைத்தார். அற்புதம்மாளின் போராட்டக் கயிறு இறுக, இறுக, பேரறிவாளனின் கழுத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த தூக்குக் கயிறு இளகத் தொடங்கியது. அற்புதம்மாளின் தொடர் போராட்டத்தால், பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த வழக்கில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் இதை பரிந்துரைத்தது. அதற்காக முதல்வரை நேரில் சந்தித்து அற்புதம்மாள் நன்றி கூறினார். மறுபக்கம் சட்டப்போராட்டத்தையும் நடத்தி கொண்டு இருந்த அவர் இறுதியாக அதில் வெற்றியும் பெற்றார்.

* மகனை பார்க்காமல் திரும்பிய அற்புதம்மாள்
ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் பேரறிவாளன் கடந்த 1991ல் கைது செய்யப்படுகிறார். பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டதற்கு மறுநாளில் இருந்து, அதாவது 1991 ஜூன் 12ம் தேதி தொடங்கியது, அற்புதம்மாளின் ஓட்டம். ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் தலைமை இடம் மல்லிகை. அங்கு வைத்து தான் பேரறிவாளனை விசாரித்தனர். அற்புதம்மாள் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குவந்து, சிபிஐ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, மீண்டும் பூந்தமல்லி சென்று அங்கு காத்திருந்து மகனைப் பார்க்க செல்வார். ஆனால். பல நாட்கள் பேரறிவாளனைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டார்.   மல்லிகையில் இருந்த மகனைப் பார்க்க, ஒவ்வொரு நாளும் அங்கு காவலில் இருந்த போலீஸிடம் கெஞ்சுவார், கதறுவார். ஆனால் யாருமே அவரை உள்ளே விடவில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு தான் வெளியேறுவார் அற்புதம் அம்மாள்.

* திருப்புமுனையை ஏற்படுத்திய வாக்குமூலம்
கடந்த 2017ல் சிபிஐ அதிகாரியாக இருந்த தியாகராஜன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், பேரறிவாளனிடம் நான் நடத்திய விசாரணையின்போது, அவர் எனக்கு ஒன்றுமே தெரியது என்றுசொன்னதை நான் அறிக்கையில் பதிவு செய்ய தவறி விட்டேன். அவருடைய இந்த அறிவிப்பு வழக்கிற்கு பேருதவியாக அமைந்தது.

* கருணை மனுவும், தள்ளுபடியும்
கடந்த 1999 அக்டோபர் 10ம் தேதி பேரறிவாளன் உட்பட தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த மனுவை, கடந்த 1999 அக்டோபர் 29ம் தேதி ஆளுநர் பாத்திமா பீவி அவற்றை தள்ளுபடி செய்தார். 2007ம் தேதி  குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த மனுவை கடந்த 2011 ஆகஸ்ட் 12ம் தேதி  கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

* அரசியல் சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி விடுதலை
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161ன் கீழ் தன்னை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு அளித்தார். ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால் தயார் அற்புதம் அம்மாள் அவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த  2015 டிசம்பர் 2ம் தேதி சிபிஐ விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த 2018 செப்டம்பரில் 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமர்வு தீர்ப்பளித்தது.

* நளினியின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்த கலைஞரின் அமைச்சரவை
கடந்த 2000 ஏப்ரல் 19ம் தேதி மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2000 ஏப்ரல் 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

* 11  ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கருணை மனுக்கள்
2011 ஆகஸ்ட் 26: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் பெரும் மன உளைச்சலுக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாகவும், எனவே தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. கடந்த 2014 பிப்ரவரி 18ம் தேதி அவர்களின் கருணை மனுக்கள் பல ஆண்டு காலம் எந்தவித காரணமுமின்றி நிலுவையில் வைக்கப்படிருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* பேரறிவாளன் வழக்கில் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு கடந்த 111 நாட்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியது. அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எப்படி அனுப்பலாம். அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். ‘பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும்’ என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ‘அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது’ எனவும் கேட்டிருந்தனர்.

* ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு
1991 மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இருந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி உரையாற்ற திட்டமிட்டிருந்தார். அவரை வரவேற்று மாலை அணிவிப்பது போல் கூட்டத்தில் ஒருவராக இருந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்த தாணு என்பவரால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி அறிவு எனும் பேரறிவாளன்  கடந்த 1991 ஜூனில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசன் இந்த படுகொலைக்கு மூளையாக செயல்பட்டார். அவருக்கு இரண்டு 9 வோல்ட் பேட்டரிகள் வாங்கிக்கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பேட்டரிகள் மூலம் இயக்கப்பட்டது. எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட பலர் மீது பயங்கரவாதம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடா) சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கில் கடந்த 1998 ஜனவரி மாதத்தில்  விசாரணை நீதிமன்றம்  25 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Tags : Arputhammal , The long, protracted legal battle waged by Arputhammal
× RELATED ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை...