×

வேலூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்

வேலூர்: தொடர் மழையினால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் பாலாற்றுப்படுகையில் அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். உடைந்த பைப்லைன் சீரமைக்கும் பணிகள் முடிந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், தமிழக-ஆந்திர வனப்பகுதியில் பெய்யும் மழையினால் குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றிரவு 8 மணியளவில் சத்துவாச்சாரி, குடியாத்தம், பாகாயம், காட்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்யும் தொடர் மழையினால், பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் தொடங்கியது. இதில் வேலூர் புதிய பாலாறு மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப்லைன் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் காட்பாடி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி தடைப்பட்டுள்ளது. எனவே உடைந்த பைப்லைனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீட்டரில்: குடியாத்தம் 15, காட்பாடி 20, மேல்ஆலத்தூர் 21, பொன்னை 21, வேலூர் 15.1, வேலூர் சர்க்கரை ஆலை 16.2. மாவட்டத்தில் பதிவான மொத்த மழையளவு 103.50 மி.மீட்டர். மாவட்டத்தின் சராசரி மழையளவு 17.25 மி.மீட்டராக உள்ளது.

Tags : Vellore Lake Cauvery , Vellore Lake, Irrigation, Increase
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...