×

தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு : 20 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பும் அலைகள்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் நேற்று பலத்த காற்றுடன் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டது. முகுந்தராயர்சத்திரம் கடலில் 20 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக அலைகள் எழும்பி, கரையில் முட்டி மோதியது. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. அலைகள் ஆக்ரோஷத்துடன் எழும்பியது. முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள படகு கட்டும் தளத்தில் ஆக்ரோஷத்துடன் மோதுவதால் 20 அடி உயரத்திற்கும் மேல் கடல் அலைகள் எழும்பியது.

தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், அரிச்சல்முனை கடல் பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி கால் நனைத்து விளையாடுகின்றனர். ஆபத்து நிறைந்த அரிச்சல்முனை கடல் பகுதியில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு சுற்றுலா பயணிகள் பலரும் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இதனை அறியாமல் குழந்தைகள், பெண்கள் என சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடல் பகுதியில் கடலில் இறங்குகின்றனர். விடுமுறை நாட்களில் அரிச்சல்முனை கடற்கரைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் வாய்ப்புள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் தொடராமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.



Tags : Dandushkodi , rameswaram, sea, thanushkodi
× RELATED விவசாயிகள் முற்றுகை போராட்டம்