×

‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

கேன்ஸ்: ‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கிய நிலையில், பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை என்று நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை குறிப்பிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு திரைப்பட விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில் உக்ரைன் அதிபரும், நகைச்சுவை நடிகருமான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கேன்ஸ் திரைப்பட ெதாடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக தாக்கி பேசினார்.

அவரது உரையில், ‘பாசிஸ்டுகள் குறித்த நகைச்சுவைகளை ரசிக்க வேண்டும். ஹிட்லரைப் பற்றிய நடிகர் சார்லி சாப்ளின் நகைச்சுவை மிகவும் ரசிக்கத்தக்கவை. கடந்த 1940ல் வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பாசிஸ்டுகள் குறித்து திரைப்படத் துறை விமர்சிக்க வேண்டும். அதனை பார்த்து சினிமா தயாரிப்பாளர்கள் அமைதியாக இருக்க வேண்டாம். நமக்கு இப்போது புதிய சார்லி சாப்ளின் தேவை. கருத்து சுதந்திரத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அதனை சினிமா மூலம் வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய திரைப்பட தயாரிப்பாளர்களின் பல திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளது. இதில் செர்ஜி லோஸ்னிட்சாவின் ஆவணப்படமான தி நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் ஆகியன அடங்கும். உக்ரைன் - ரஷ்யப் போருக்கு மத்தியில், உக்ரைன் அதிபரும், நகைச்சுவை நடிகருமான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பங்கேற்பு விழாவில் முக்கியத்துவம் பெற்றது.


Tags : Cannes' International Film Festival ,Charlie Chaplin ,Comedian , kans. ukraine president,
× RELATED விக்ரம் படத்தில் இணைந்த மலையாள நடிகர்