ஒகேனக்கல் அருவியில் செல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்து பெண் பலி : உறவினர்கள் கண் முன் பரிதாபம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் ஆறுமுகம் மனைவி சுமதி (35). இவர் நேற்று குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சென்றுள்ளார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு பரிசல் மூலம் ஐந்தருவி பகுதிக்கு சென்றனர். பார்வை கோபுரம் அருகே பாறையில் நின்றவாறு, ஐந்தருவியை செல்பி எடுக்க சுமதி முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக, திடீரென சுமதி பாறை வழுக்கி காவிரி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். அதனைக்கண்டு திடுக்கிட்ட உறவினர்கள் சத்தம் போட்டனர். பரிசல் ஓட்டிகள் விரைந்து சென்று சுமதியை மீட்டனர். பின்னர், ஊட்டமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சுமதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின்பேரில், ஒகேனக்கல் போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: