அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரம் தனியார் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (26). கடலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு பணியில் இருந்துள்ளார். சிதம்பரம் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 6ம் தேதி முதல் இவர் இந்த பணியில் சுழற்சிமுறையில் ஈடுபட்டு வந்தார். இன்று அதிகாலை காவலர் பெரியசாமி, வினாத்தாள் அறையின் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து இறந்த காவலருடன் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரிடம் கேட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறு விபத்தில் சிக்கி இருக்கிறார். அதன் பிறகு விடுமுறை முடிந்து பணிக்கு வந்தபோதும் விடுமுறை தொடர்ந்து வேண்டுமா என அதிகாரிகள் கேட்டுள்ளனர். நான் உள்ளூரிலேயே இருப்பதால் பணியில் சேர்ந்து கொள்கிறேன் என கூறிவிட்டு பணியில் சேர்ந்துள்ளார். இறப்பதற்கு முன்பாக செல்போனில் பேசி இருக்கிறார். அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். திருமணம், காதல் ஆகிய பிரச்னைகள் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றார். பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: