×

கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கும்பல் மிரட்டல் விடுத்ததால் முதியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கும்பல் மிரட்டியதால் தீக்குளித்து முதியவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் பெரிய வியாபாரிகள் முதல் சிறிய வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கி தினமும் கட்டி வருகின்றனர். இவ்வாறு வட்டிக்கு விடுகின்றவர்கள், பணம் கொடுக்காதவர்களிடம் கடுமை காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பலபேர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளனர்.

கோயம்பேடு பகுதியை சேர்ந்த பழனியப்பன்(60) மார்க்கெட்டில் காய்கறி வாகனம் ஓட்டி வருகின்றார். இவர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன்(40) என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதமாக வட்டி கட்டாததால் சரவணன் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். மேலும் பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தை  தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த பழனியப்பன் நேற்று தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு கோயம்பேடு காவல் நிலையத்துக்கு வந்து, ‘வட்டி பணத்தை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டும் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் வந்து அவரை தடுத்து காப்பாற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கும்பல் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.  


Tags : Kanduluthi ,Coimbade Market , Coimbatore Market, Kanthuvatti, intimidation, arson suicide
× RELATED டாக்டரின் மருந்து சீட் இல்லாமல்...