19வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்துவீச்சு திருப்பு முனையாக அமைந்தது : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி

மும்பை: ‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். ஓபனர் பிரியம் கார்க் 26 பந்துகளில் 42 ரன்களும், நிகோலஸ் பூரன் 22 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

வெற்றிக்கு 194 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணியின் ஓபனர்கள் வலுவான துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவர்களில் 95 ரன்களை குவித்தனர். ரோஹித் ஷர்மா 48 ரன்களும், இஷான் கிஷன் 43 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் இறங்கிய டிம் டேவிட் 18 பந்துகளில் 46 ரன்களை எடுத்து மிரட்டினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 19வது ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் அவர் ரன் ஏதும் கொடுக்காமல், சஞ்சய் யாதவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். பசல்ஹக் பரூக்கி வீசிய கடைசி ஓவரில் மும்பை வீரர்கள் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சன் ரைசர்ஸ் அணிக்கு கிடைத்துள்ளது.

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘‘சில தோல்விகளுக்கு பிறகு, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறோம். இத்தொடரில் குறிப்பாக இப்போட்டியில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். ராகுல் திரிபாதி இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் எப்போதுமே எங்கள் அணியின் ஸ்பெஷல் வீரர்.

புவனேஷ்வர்குமார் வீசிய 19வது ஓவர், ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து விட்டது. மெய்டன் ஓவரை வீசி, அதில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தி விட்டார். அந்த ஓவர்தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்று சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ஆட்டநாயகன் ராகுல் திரிபாதி கூறுகையில், ‘‘ஒரு ரன், 2 ரன்களாக எடுத்துக் கொண்டே, நல்ல பந்துகளை தேர்வு செய்து, பவுண்டரிகள், சிக்சர்களை அடித்தேன். பும்ரா சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தை குறி வைத்து, துல்லியமாக பந்து வீசினார். நானும் நன்கு கணித்து ஆடினேன். போட்டியில் வெற்றி என்பதுதான் முக்கியம். அந்த வகையில் எனது ஆட்டம் வெற்றிக்கு உதவியிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘கடைசி 2 ஓவர்களில் வெற்றி எங்கள் பக்கம் இருந்தது. டிம் டேவிட் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். 19வது ஓவரில் புவனேஷ்வர்குமார் நம்ப முடியாத வகையில் பந்து வீசி, வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து விட்டார்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: