×

உடுமலை பஸ் நிலையத்தில் சுற்றுலா தலங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை பஸ் நிலையத்தில் சுற்றுலா தலங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைப்பதோடு, வெளியூர் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான அமராவதி அணை, முதலை பண்ணை, திருமூர்த்தி அணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம், பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பலரும் ஆன்மீக தலங்களான பழனி, மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்டவற்றுக்கு உடுமலை வழியாக பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வழித்தடங்களில் உடுமலை அருகே உள்ள சுற்றுலா தலங்களான அமராவதி அணை, திருமூர்த்தி அணை குறித்த தகவல்களை உடுமலை மத்திய பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வரைபடங்களுடன் வழித்தடங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:  ரூ.50 லட்சம் மதிப்பில் அமராவதி அணை அருகே உள்ள முதலை பண்ணையில் குழந்தைகளை கவரும் வகையில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால், இது குறித்து பெரிதாக விளம்பரப்படுத்த படாததால், சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. அமராவதி அணை பூங்கா அருகே செல்லும் சாலையை செப்பனிட்டு, அணை பூங்காவை சுத்தப்படுத்தி, வண்ண நீரூற்றுகள் மற்றும் வண்ண மலர் கண்காட்சிகள் அமைப்பதற்கு ஏற்ற வகையில் மலர் செடிகள், கொடிகள் அமைத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர். ஜூன் மாதம் 13ம் தேதி வரை கோடை விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் உடுமலை அருகிலுள்ள சுற்றுலா தலங்களை காண வாகன ஓட்டிகளின் கண்களில் படும் வகையில் சுற்றுலா தலங்கள் குறித்த வழித்தடங்களும் அவற்றின் பெருமை குறித்தும் விளம்பர பலகைகளை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Udumalaya Bus Station , At Udumalai bus stand Insistence to put up notice board regarding tourist sites
× RELATED ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல்...