ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தனர்.161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது 142 பிரிவு.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை.  முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை!!

*முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை கடந்த 2014ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

*தொடர்ந்து, 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

*அதன் மீது 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.

*அதே சமயம் குற்றமே நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுதலை செய்யக் கோரி கடந்த 2020ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். 10 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

*பேரறிவாளன் விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற வாதத்திற்கு இடையே அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்று கேட்ட நீதிபதிகள், நீதிமன்றமே விடுதலை செய்ய நேரிடும் என்று கூறினர்.

*மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற கூறிய நீதிமன்றம், தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.

*உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இன்று மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: