கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தருமபுரி: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக நீரானது வந்துகொண்டிருக்கிறது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கலில் பரிசில்களை இயக்கவும், நீர்நிலைகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 100 மி.மீ-க்கு அதிகமாக மழை பெய்ததை அடுத்து, ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்தது.

நேற்றைய நிலவரப்படி, ஒகேனக்கலில் நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக தண்ணீரானது வந்த வண்ணம் உள்ளது. அதிகபடியான நீர்வரத்தின் காரணமாக, ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அங்கு குளிக்கவும், பரிசில் பயணம் செய்யவும் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொடர்ந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்தானது அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி காலை 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 109.04 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.31 அடியாக அதிகரித்துள்ளது. மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.       

Related Stories: