சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டு இருந்த பள்ளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த பெரியசாமி என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் ஆவார். சிதம்பரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு காவலர் பெரியசாமி துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருடன் ஊர்காவல்படையைச் சேர்ந்த ஒருவரும் பாதுகாப்புப் பணியில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை பெரியசாமி தனது கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சிதம்பர நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். காவலர் பெரியசாமியின் தற்கொலைக்கு பணிசுமையா அல்லது திருமணத்தில் ஏதாவது பிரச்சனையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள வேலங்கபட்டு கிராமத்தைச் சேர்ந்த காவலர் பெரியசாமிக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: