புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2 குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் கைது

பொன்னமராவதி: புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய் நேற்று கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் பொன்னடைக்கன்(28). பொள்ளாச்சியில் தேங்காய் மண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம்(21). இவர்களுக்கு ஜெகதீசன்(2) என்ற மகனும், தக்‌ஷியா (8மாதம்) என்ற மகளும் இருந்தனர். பொன்னடைக்கன் குடிப்பழக்கம் காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் திருவிழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்து இருந்தார். நேற்றுமுன்தினம் அதே பகுதியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாய் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

அப்போது அங்கு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி இரவு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கும் அவர்களிடையே தகராறு முற்றியது. இதனால் ஆத்திரத்துடன் பொன்னடைக்கன் வெளியே சென்று விட்டார். இதையடுத்து செல்போன் மூலம் கணவரை வீட்டிற்கு வருமாறு பஞ்சவர்ணம் அழைத்துள்ளார். வீட்டிற்கு வரவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் அவர் வரவில்லை.

 இதனால் ஏற்பட்ட விரக்தியில் 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்வதற்காக வெளியே சென்றார். தகவலறிந்து பொன்னமராவதி போலீசார் வந்து விசாரணை நடத்தி, பஞ்சவர்ணத்தை நேற்று கைது செய்தனர்.

Related Stories: