டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சென்னை: பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் கேக்சியாஸ் டோசுல் நகரில் நடந்த 24வது கோடைகால ஒலிம்பிக் 2022 போட்டியில் (மே 1-15) பங்கேற்ற இந்திய அணியில் தமிழ்நாட்டை சார்ந்த நீச்சல் வீராங்கனை ஆர்.சினேகா, தடகள வீராங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின் அனிகா, டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன் ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றனர்.

பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா (மதுரை) ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவுகள் மற்றும் குழு போட்டியிலும் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கம் வென்றார். தடகள வீராங்கனை சமீகா பர்வீன் நீளம் தாண்டுதலில் 9வது இடமும், மும்முறை தாண்டுதலில் 4வது இடமும், தடகள வீரர் மணிகண்டன் நீளம் தாண்டுதலில் 6வது இடமும், சுதன் மும்முறை தாண்டுதலில் 4வது இடமும் பிடித்தனர்.

சாதனையாளர்கள் அனிகா மற்றும் பிரித்வி ஆகியோர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். இவர்களுக்கு விமானநிலையத்தில் எஸ்டிஏடி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனிகா எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் ஆனந்த குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா, நேரு விளையாட்டு அரங்க மேலாளர் வெங்கடேஷ், வேளச்சேரி நீச்சல் விளையாட்டு அரங்க அலுவலர் பிரேம்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் தலைவர் பாலாஜி, பொதுச்செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: