×

எல்ஐசி பங்குகள் மந்தமான அறிமுகம்.! முதல் நாளில் ரூ.42,500 கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் ஏமாற்றம்

புதுடெல்லி: பங்குச்சந்தையில் அறிமுகமான எல்ஐசி பங்குகள் 8 சதவீதம் விலை குறைத்து பட்டியலிடப்பட்ட நிலையில், பங்குகள் விலை பெரிய அளவில் அதிகரிக்காததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதல் நாளிலேயே எல்ஐசி.யின் சந்தை முதலீட்டில் ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. முதலில் 5 சதவீத பங்குகளை வெளியிட தீர்மானித்திருந்த ஒன்றிய அரசு, பங்கு சந்தை நிலவரம் சரியில்லாத காரணத்தால் 3.5% பங்கை மட்டும் வெளியிடுவதாக பின்னர் அறிவித்தது.

மேலும், ஒரு பங்கை ரூ.902 முதல் 949 வரை விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பங்குகளை வெளியிடும் முன்பாக, ஒரு பங்கின் விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குகளை வாங்குவதற்கான நடைமுறை கடந்த 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 22.13 கோடி பங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே எல்ஐசி பங்குகள் நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைத்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் ஒரு பங்கு ரூ.867.20க்கும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.872க்கும் பங்குகள் பட்டியலிடப்பட்டன. எல்ஐசி பங்கு வெளியீட்டால் பங்குச்சந்தை வர்த்தகம் பரபரப்பாக நடந்ததால், மும்பை பங்குச்சந்தை 1300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. ஆனால், எல்ஐசி பங்குகள் பெரிய அளவில் விலை அதிகரிக்கவில்லை. வர்த்தகம் முடிந்த போது, மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்கின் விலை ரூ.873 ஆக இருந்தது. இதனால் எல்ஐசி பங்கு முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், எல்ஐசி சந்தை மூலதன மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக நேற்று சரிவை சந்தித்தது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எல்ஐசி பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.20,557 கோடி நிதி திரட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : LIC , LIC shares sluggish introduction.! Rs 42,500 crore loss on first day: Investors disappointed
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...