×

சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை: சென்னை, மும்பை, டெல்லி உள்பட 10 இடங்களில் நடந்தது

சென்னை: சீனர்கள் 263 பேருக்கு சட்ட விரோதமாக இந்தியாவில் பணியாற்ற விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் புதிவு செய்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 10 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில், கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை ஒன்றிய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஒன்று வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ரூ.305 கோடி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக, 2019ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அதை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்தனர்.

6 நாட்கள் விசாரணைக்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றார். ஆனால் திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுவிக்கப்படவில்லை. இறுதியாக அதே ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றார். கிட்டத்தட்ட ​​100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் இருந்தார். அதைதொடர்ந்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த மார்ச் மாதம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரித்தார். அமலாக்கத்துறையின் மனுவைப் பரிசீலித்த நீதிபதி, அதுதொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகனும் எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தனது தந்தை ப.சிதம்பரம் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குறிப்பாக 2010-14ம் ஆண்டில் சீனா நாட்டை சேர்ந்த 263 சீனர்களுக்கு சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவில் தங்க விசா பெற்று தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ விசாரணையை விரிவாக நடத்தியது. அதில், பஞ்சாப் மாநிலத்தில் மான்சா பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று 1980 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அனல் மின் நிலையம் கட்டுமான பணியை, அந்த தனியார் நிறுவனம் சீனா நிறுவனத்துக்கு வழங்கியது. கட்டுமான பணி மிகவும் தாமதமாக நடந்து வந்ததால் தனது நிறுவனத்தில் பணி செய்ய சீனா நாட்டு நிறுவனம் 263 தொழில் நுட்ப நிபுணர்களை இந்தியாவுக்கு அழைத்து வர முடிவு செய்தது. ஆனால் இந்திய சட்டப்படி ஒரே நேரத்தில் அதிகப்படியான ஆட்களை வெளிநாட்டில் இருந்து பணிக்கு அழைத்து வர முடியாது. அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விதித்துள்ள விசா கட்டுப்பாடுகள் தடையாக இருந்தது. இந்த தடையை நீக்கி சீனாவில் இருந்து 263 தொழில் நுட்ப நிபுணர்களை இந்தியாவுக்கு கொண்டு வர சீனா நிறுவனம் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்காக அந்த நிறுவனம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் அந்த கடிதத்தின் படி இவ்வளவு ஆட்களை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வர ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அனுமதி தர மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடுகளை தளர்த்தி 263 சீனர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான பணிகளில் இடைத்தரகர்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தான், அந்த சீனா நிறுவன பிரதிநிதிகள் சென்னையை ேசர்ந்த முக்கிய நபரை சந்தித்து அனல் மின் நிலையம் கட்டுமான பணிக்கு 263 சீனர்களை இந்தியாவில் தங்கி பணியாற்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் விதிகளை தளர்த்தி அனுமதி பெற்று தரவேண்டும் என்று அணுகியுள்ளனர். இதற்காக அனல் மின் நிலையம் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனம் ரூ.50 லட்சம் பணத்தை லஞ்சமாக சென்னையை சேர்ந்த நபருக்கும், மும்பையை சேர்ந்த அவரது நெருங்கிய கூட்டாளி நடத்தும் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக 263 தொழில் நுட்ப நிபுணர்களை சீனாவில் இருந்து இந்தியா வர விசா பெற்று தந்தது கார்த்தி சிதம்பரம்தான் என்பது சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், ரூ.50 லட்சம் பண பரிமாற்றம் செய்யப்பட்ட மும்பை நிறுவனம், சீனர்கள் விசா  தொடர்பான எந்த பணிகளிலும் ஈடுபடவில்லை என்றும் ஆனால் அந்த நிறுவனத்துக்கு எந்த வித தொடர்பும் இன்றி ரூ.50 லட்சம் பணம் பஞ்சாப் மான்சாவில் அனல் மின் நிலையம் அமைக்கும் நிறுவனம் சார்பில் அனுப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஒன்றிய அரசின் சட்ட விதிகளுக்கு எதிராக முறைகேடான வகையில் ரூ.50 லட்சம் பணம் பெற்று கொண்டு ஒரே நேரத்தில் 263 சீனர்கள் இந்தியாவில் தங்கி பணியாற்ற உதவியதாக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய நண்பர் எஸ்.பாஸ்கரராமன், பஞ்சாப் மாநிலத்தில் அனல் மின் நிலையம் அமைத்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி விகாஸ் மகாரியா மற்றும் பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் உள்ள தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம், அறியப்படாத அரசு உழியர்கள் மற்றும் முகவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதைதொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வசித்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் நடத்தும் அலுவலகம் உட்பட 3 இடங்களில் டெல்லியில் இருந்து வந்த 14 சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.   

அதேபோல், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு, மும்பையில் உள்ள நிறுவனங்கள், கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியில் உள்ள நிறுவனம், ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா பகுதியில் உள்ள நிறுவனம், பஞ்சாப் மான்சாவில் உள்ள நிறுவனம் என 10 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது, வீடு, அலுவலகங்களில் உள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. சோதனையின்போது நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களின் செல்போன்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு வீடு மற்றும் அலுவலகங்களில் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடவில்லை. அதேபோல் உள்ளே இருந்தும் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

குறிப்பாக, சென்னையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டின் முன்பு சிபிஐ சோதனையின்போது, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் சென்னை வீடு மற்றும் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.50 லட்சம் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியதாக சிபிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சிபிஐயின் இந்த அதிரடி சோதனையின் போது, ப.சிதம்பரம் ராஜஸ்தான் மாநிலத்திலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னை வீட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டும் இருந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அளித்துள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ப.சிதம்பரமும் ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்தார். சமீபத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததை ஒன்றிய அரசின் தோல்வி என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : CBI ,P. Chidambaram ,Chennai ,Mumbai ,Delhi , CBI raids Chidambaram's homes for allegedly accepting Rs 50 lakh in bribes to issue visas to Chinese: 10 places including Chennai, Mumbai and Delhi
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி