×

அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்து விவரங்கள் அடங்கிய புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய  புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல், கோயில்களின் மேம்பாட்டுக்கும், பக்தர்களின் நலனுக்காகவும் முனைப்புடன் செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அன்றாட சாதனைகளை நாள்தோறும் மக்கள், அனைவரும் அறியும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  முதன்முதலாக, சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் 6.6.2021 அன்று மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் வெகு விரைவாக மீட்கப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட அனைத்தையும் தொகுத்து அழியாத ஆவணங்களாக அச்சுப் பிரதிகளாக அனைவரும் அறிந்து கொள்வதற்காக வெளிப்படைத் தன்மையுடன் இந்நூல் வெளியிட முடிவு செய்தது. அதன்படி, சென்னை, தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திர மோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதில் 7.5.2021 முதல் 31.3.2022 வரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரம், கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலம், மனை, கட்டிடம், திருக்குளம் விவரங்கள் ஆகியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

இக்கோயில்களில் பல்வேறு வசதிகளை செய்துதருவதற்கு வாய்ப்பான இடங்களாகவும், இருந்து வருவதற்கு இச்சொத்துக்களே மூல வளங்களாக  விளங்கி வருகின்றன. இத்தகைய விலை மதிக்க முடியாத கோயில் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் சமய தலைவர்கள் கற்பித்த பல்வேறு மரபுகளையும், நடைமுறைகளையும், தினசரி பூஜை முறைகள், வழிபாடுகள், காலமுறை திருவிழாக்கள், கோயில் புதுப்பிக்க மற்றும் பாதுகாப்பு பணிகள் ஆகியவை திருக்கோயிலுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடன் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க இந்நூல் அடிப்படை ஆதாரமாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. மீட்கப்பட்ட சொத்துக்கள் ரோவர் கருவிகள் அளவீடு செய்யப்பட்டு HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Tags : Treasury ,Chief Minister ,MK Stalin , Book containing details of temple property recovered from occupation on behalf of the Treasury: Chief Minister MK Stalin released
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...