×

களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி: 1 கிலோ ரூ.26க்கு விற்பனை

களக்காடு: களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 1 கிலோ வாழைத்தார் ரூ.26க்கு விற்பனையாகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு வாழும் மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் பம்பரம் போல் சுழன்று விவசாய பணிகளை மேற்கொண்டாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ வேதனைதான். அந்த வகையில் தற்போது வாழைத்தார்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது. களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு  மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதை விட வாழைகள் பயிர் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயார் செய்ய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 நடப்பாண்டிலும் களக்காடு, மாவடி, மலையடிபுதூர், திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டது. ஏத்தன், ரசகதலி, கதலி, செந்தொழுவன் நாடு உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாழைத்தார் அறுவடை தொடங்கியது. வியாபாரிகள் வயல்களுக்கு வந்தே எடை போட்டு வாழைத்தார்களை கொள்முதல் செய்து வருகின்றனர். சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ.54 வரை விற்பனை ஆகியது. அதிக லாபம் இல்லை என்றாலும், நஷ்டம் இல்லை என்ற நிலையில் விவசாயிகள் திருப்தியுடன் வாழைத்தார்களை விற்பனை செய்தார்கள். அதன் பின் வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விட்டது. படிப்படியாக விலை குறைந்து தற்போது 1 கிலோ ரூ.26க்கு விற்பனையாகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.

ஒரு வாழைத்தாருக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, உரமிடுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது வரை ரூ.200 வரை செலவு செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் செலவழித்தை விட மிகவும் குறைவாக ரூ.100க்கு குறைவாக கிடைப்பதால் விவசாயிகளுக்கு செலவழித்த ரூபாய் கூட கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனால் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

காரணம் என்ன?
இதுகுறித்து விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், ‘தற்போது வாழைத்தார் வரத்து குறைவாக உள்ளது. இவ்வேளையில் வாழைத்தார் விலை உயர்வது தான் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காற்றினால் வாழைகள் சாய்ந்ததாலும், கேரளாவில் மழை பெய்து வருவதாலும் விலை குறைந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் அறிவித்த வாழைத்தார் ஏலமிடும் மையைத்தை களக்காட்டில் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Kalakkadu , Wilderness area, inhabited, price, fall
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்